பண்பாக்கு உன் உளத்தை.....!
நக்கல் நையாண்டி நளினம் கொட்டி
உக்கல் ஆக்கி உளுக்கப் பண்ணி
குனியப் பண்ணி குட்டிச் சுவராக்கி
தனியப் போக வைப்பர் அவனை.
சொந்த வாழ்க்கை செய்யும் வேலை
எந்த விடயத்தையும் விடாது எடுத்து
பிழை பிடித்து பேயாட்டம் ஆட்டி
உளைய விடுவர் மனத்தை எல்லாம்.
தூணாக நின்ற கெட்டிப் பயலை
வீணாக அவனை சுட்டிப் பேசி
விண்ணோடு நின்றஅவன் இலட்சிய நெருப்பை
மண்ணோடு மண்ணாக ஆக்குவர் அவனை.
ஏன் இவர்கள் இழுக்கிறார்கள் என்றால்
கூன் இவர்கள் குறைகளை மறைக்கத் தானே
தம்குறை மற்றவர் கதைப்பதற்கு முன்னரே
உம்என்று மற்றவரை ஆக்கவேண்டும் தானே.
இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லி
கல்லாக சமைத்து உளமதைக் குறுக்கி
மல்லாந்து படுக்க வைப்பர் அவனை
நாலைந்து நாட்கள் நல்ல காய்ச்சலில்.
சொல்லாலே அடித்து சுருங்கப் பண்ணி
பல்லாகச் சிரித்து பருமைப் படுத்தி
வில்லாக அவனை வளைத்துப் பழித்தல்
கொல்லாமல் கொல்வது போன்றதொரு வழிதான்.
முள்ளாக நீயும் முழுமையாகக் குத்தி
உள்ளாக அவனை சிறுமைப் படுத்தி
உல்லாக இருந்தவனை சில்லாக ஆக்கி
பொல்லாதவனாக நீ இருத்தல் சரியோ?
திருந்து அந்த நரகத்தை விட்டு - அல்லது
உருந்து நீ உருத்தெரியாது போவாய்.
சாபம் இட்டு திட்டித் தீர்ப்பர் உம்மை
காகமும் கொத்தாது செத்த உம் உடலைஎன்று
உண்டாக்கு உன்மனதில் நல்லெண்ணத்தை
பண்பாக்கு உன்உளத்தை விளைநிலமாக
காண்பாய் மனதில் தினமும் புதுமகிழ்ச்சி
பூண்டால் உறுதி மாண்பாய் இருப்பாய்.
அழகன்