வாழ்க்கைப் பயணம்
மனித வாழ்வதோ மாயங்கள் நிறைந்தவை-நீ
மனிதனாய் வாழ்ந்தால் அவை நியாயங்கள் நிறைந்தவை
நிறைவுடன் வாழ்ந்து நீத்தவர் உண்டோ?
கவலைகள் துறந்து கடந்தவர் உண்டோ
நீரினில் தோன்றிடும் அலைகளாய்
அலைகளில் தோன்றிடும் நுரைகளாய்
நுரைகளில் தோன்றிடும் குமிழ்களாய்
முடிந்தவர் வாழ்வினை அறிந்தவர் யாரோ
கடந்ததை எண்ணி கவலையில் தோய்வார்
நடந்ததை எண்ணி நடைப்பிணமாவார்
மாற்றான் செல்வப் பெருக்கினைப் பார்த்தால்
நிலை தடுமாறுவார் நின்மதி கெடுவார்
குறையேதுமில்லா உடலினைப்பெற்றும்
ஊன மனத்துடன் உலாவியே திரிவார்
ஒருவரை ஒருவர் புரிந்திட மறுத்தார்
புரிதலே வாழ்வின் புதிரென அறிவாய்
காற்றும், மழையும் ,வெயிலும் ,நிலவும்
காசு வாங்கியோ நமக்கு உதவும்?
இறைவன் தந்த புன்னகைப்பூவை
அகத்தின் அழகை இயம்பும் மொழியை
சிந்திட மறந்தார் சிரித்திடாதிருந்தார்
பிஞ்சுக் குழந்தையாய் பிரந்தவரெல்லாம்
பெரிய மனிதராய் வளர்கிறார் காண்பீர்
பள்ளிப் பருவத்தில் பட்டாம் பூச்சியாகி
பருவ வயதினில் வசந்தங்கள் சுமந்திருந்தாய்
வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தே போனதால்
வாலிபம் தேய்ந்து வயோதிபம்வந்துவிடும்
பூமியை விட்டு புறப்படப் போவதை-நீ
நித்தமும் எண்ணி நிதம் நிதம் நோகிறாய்
வரவும் செலவும் வாழ்வினில் உண்டென்றால்
வரவில் மகிழ்ந்து செலவில் துடிப்பதேன்
நதியோர மரத்தில் குருத்துக்கள் அரும்பும்
அரும்பும் குருத்துக்கள் இலைகளாய் மாறும்
பச்சை இலைகள் ஓர்நாள் பழுக்கும்
பழுத்த இலைகள் நதிமேல் விழுமே
வீழ்ந்த இலைகள் மிதந்தே போகும்
இலையின் பாதை யார்தான் அறிவார்
இலையின் பயணம் இறைவன் அறிவார்
நீயும் இலைதான் நீரின் கதைதான்
நீ இதை உணர்ந்தால் நிம்மதி பெறுவாய்
புங்கையூரான்