புதிய கிளிநொச்சி
அழகு தேசமே
எழில் கொஞ்சும் பேரழகே-உன்
இறக்கை ஒடிந்து
இயற்கை வற்றி
இடிந்து போனதேனோ
உறக்கம் அறியா-எங்கள்
ஊர்களின் மெளனம் தான் என்ன..?
பட்டுப் போய் கிடக்கும்-என்
பழைய ஊரே
கிளிநொச்சி மண்ணே-நீ
கிலி கொண்டு இருப்பதேனோ...?
உன்னில் கொட்டுண்டு கிடக்கும்
அத்தனை அழகும் எங்கே...?
சாலையோரம் உயர்ந்து நின்ற
கட்டடங்களே...........
டிப்போ பேருந்து தரிப்பிடமே...
யாருக்கு ஏது செய்தீர்
தெருவின் ஓரம்
சிரித்து நின்ற
சந்திரன் பூங்காவே
உன்மீதும் புதியதோர் சிலையா..?
சிங்கள வெறியன்
நினைவுத் தூபியா
நீ அதிர்ந்தாவது
வீழ்த்திடமாட்டாயா..?
இதமிதமாய் குளிரவைத்த
சேரன் பாண்டியன்
சுவையூற்றுக்களே
உங்கள் அத்திவாரங்கள் எங்கே...?
நீதி உணர்த்திய
தமிழீழ நீதிமன்றமே....-நீ
தப்பிழைத்ததாய் அறிந்ததில்லையே....
செந்தமிழில் பளிச்சிட்ட
பதாகைகளே......
சிங்கள மொழியில் மாறியதன்
காரணம் தான் என்ன...?
எம் தேச அரசமரமே
உன்னடியில் முளைத்திருக்கும்
சிலைதான் ஏனோ
நீயாவது சரிந்து
வீழ்ந்திடமாட்டாயோ...?
தேசத்து வாழ்வுக்காய்
தேகத்தைக் கொடுத்த
உத்தமர் ஆலயங்களே
இறப்பின் பின்னும்
நின்மதியில்லை
நம் தேசத்தில்
வெறும் கற்கள்
உம்மை என்னையா செய்தன..?
மீண்டும் முளைத்துவிடும்
என்ற அச்சம் தானோ
சூழவிருந்த சுவர்கள்
துப்பாக்கி தூக்கி
சுடும் என்ற பிரமையா?
இறந்த வீரனுக்கு எதிரியெனிலும்
மதித்து நடப்பதே
நாம் அறிந்த உண்மை
ஓடோடிவரம் வேண்டிய
தேவாலயமே,கோவில்களே
எம் மண்ணைக் காத்திடு என்று
கெஞ்சிக் கேட்டோமே
ஏன் கடவுளே தரமறுத்தீர்
ஆண்டவரே...
அலரி மாளிகையில்
அவலக்குரல் இனியும் கேட்கதோ..?
கும்பிட்ட தெய்வங்களே-நீங்கள்
மனிதர்களாக மாறிவிட்டீர்களா?
சத்தியமாய் கேட்கிறேன்
கோபம் ஒன்றும்
என்மீது வேண்டாம்
குமுறி வெடிக்கும்
உள்ளத்துத் துடிப்பால் பேசுகிறேன்
ஆயிரமாயிரம் உயிர்களை
குதற குதற
துடிக்க துடிக்க
பிழிந்து குடித்தவர்
எப்படி இறைவா அவர்க்கு
இப்படி வாழ்க்கை
நீதி தவறி நடந்தவர்
கொடுமைகள் இழைத்தவர்
நிலைப்பது என்பதில்லை-இது
உலக நியதியே
இவர்க்கு மட்டும்
சுவர்க்கமா...?
ஆண்டவரே
நெருப் பெரித்தவர்க்கு
கொடுத்துவிட்டாய் தண்டனை
தீயெடுத்துக் கொடுத்தவர்கு
எப்போது சாவு
மனித உரிமை மீறல்களாம்
உலகம் முழுதும் வெளிச்சம்
விசாரணையாம்...!
எதுவும் நடந்ததாய் தெரியவில்லை
செத்துக் கிடக்கிறது நீதி
ஆதாரம் ஏராளம்-ஆனால்
அணு கூட அசைவதாயில்லை
பொய்யும் புரட்டும்
சுத்து மாத்துக்கும்தானா
மவுசு இவ்வுலகில்
மீண்டும் மீண்டும்
நரக வேதனையா தமிழர்க்கு
நரகத்திற்கு சென்றால்
தமிழர்க்கு அது பெரிதாய் தோற்றிடாது
என்று நான் எண்ணுகின்றேன்
தமிழர் மனங்களில் கொதிக்கும்
எரிமலை குழம்பு
ஓர் நாள் வெடிக்கத்தான் செய்யும்
பற்றியெரியும் நெருப்பு
விடுதலைத்தீயாய் பற்றும்
ஓர் நாள்......
வரண்டு போன என் மண்ணே
சிரிப்பாய் ஓர் நாள்...
புரட்சித்தமிழ்