கல்லறைக்குள் கண்மணிகள்
இறையாண்மை மிக்க இலங்கையென
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாந்து கிடப்பாய் தமிழா
துயிலும் இல்லங்களும்
உழுது அழிக்கப்படுகிறது இங்கே
ஊசி முனை நிலத்திற்கும்
உரிமை இல்லாதவன் தமிழன்
ஆறடி நிலத்தினை
ஆட்சி கொள்வதோ என
நூலகப் பொதிகையாய்
அடுக்கப்பட்ட எங்கள்
ஆத்ம ஜோதிகளை
துயிலும் இல்ல பெட்டகங்களை உடைத்து
அழிக்கின்றான் பேரினவாதச் சிங்களவன்
கண்களை விற்று காட்சி வாங்குவதோ
கல்லறை என்று சொல்லி
எங்கள் கண்மணிகளை நாம் இழப்பதோ
தாயகக் கனவொன்றே இவர்கள் தாகம்
தன்மான உயர்வொன்றேதான்
இவரின் உயரிய வேதம்
இறந்தவர் என்றால்
கல்லறை என்போம்
விதைக்கப்பட்டவர்கள் இவர்கள்
விழி மூடி துயில்கின்றனர்
தூயவர்கள் துயில்கொள்ள
ஓர் இல்லமும் இல்லை யென
கொல்லும் மனிதாபமும் இல்லாதோரிடம்
இன்னும் மண்டி இட்டு கிடப்பதோ தமிழா
எழடா எழடா எம் உறவே
எரிமலைதான் நீயும் எழு கனலே
அடிமை என்பவர் இனியும் இல்லை
அடிபணி வாழ்வே உலகில் துயர்.
வல்வை சுஜேன்.