தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.
அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அது
தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?
நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.
என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.
ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று. அதுதான்...தக்காளியோதரை!!
நன்கு
பழுத்த தக்காளி....நாட்டுத்தக்காளியும்(புளிப்புக்கு) பெங்களூர்
தக்காளியுமாக கால் கிலோ.வேகவைத்து தோலுறித்து மிக்ஸியில் விழுதாக
அரைத்துக்கொள்ளவும்
2-ஸ்பூன் விதை தனியா
1 1/2 ஸ்பூன் வெந்தயம் இரண்டும் வெறும் கடாயில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்
காரத்துக்கேற்ப 8 அல்லது 10 காய்ந்த மிளகாய்...2 அல்லது 3-ஆக ஒடித்து வைத்துக்கொள்ளவும்
தாளிக்க - நல்லெண்ணை, வெந்தயம், கடுகு, உளுத்தப்பருப்பு, பெருங்காயம், ஜீரகம், பொட்டுக்கடலை,வேர்கடலை
கறிவேப்பிலை,உப்பு, வெல்லம்
அடுப்பில்
கடாய் வைத்து அரைக்கப் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், அரை ஸ்பூன்
வெந்தயம்,அரை ஸ்பூன் ஜீகரம், ஒரு ஸ்பூன் கடுகு, ஒன்றரை ஸ்பூன் உளுத்தம்
பருப்பு, ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, வேர்கடலை, காய்ந்த
மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். நன்கு வறு
பட்டதும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாற்றையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
தேவையான உப்பு சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள மல்லி வெந்தயப் பொடியையும்
சேர்த்து கொதிக்கவிடவும்.இடையிடையே நல்லெண்ணை விட்டுக்கொள்ளவும். நன்கு
கொதித்து நீர் வற்றி எண்ணை வெளிவிடும்போது சிறிது வெல்லம் சேர்த்து
இறக்கிவிடவும். தக்காளியோதரை மிக்ஸ் தயார்!!!!
பொலபொலவென வேகவைத்து
ஆறவைத்த சாதத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள மிக்ஸை சேர்த்து
கிளறி அதோடு மறுபடியும் கடுகு, உளுத்தம்பருப்பு,
பொட்டுக்கடலை
வேர்கடலை, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி
கலந்தபொடியாக அரிந்த பச்சைக் கொத்தமல்லி தூவினால் சுவையான மணமான
தக்காளியோதரை தயார்!!
நல்லாருந்துதுங்க.....நிஜம்மா...சும்மா ஒரே ரூட்டில் போகிறோமே என்று, 'நாட்டாமை!!
ரூட்ட மாத்து!' ன்னு சொன்னா மாதிரி நான் மாத்தின ரூட்டில் கிடைத்ததுதான் இந்த
தக்காளியோதரை!!