ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
அதை இன்பமெனச் சிலர் சொல்லுவதோ
மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூ ஓழுக்கும்
மெய்யா யளிக்கும் வெறுக்கையிலார் வையத்து
பல்கிளையும்வாட பணையணைதோள் சேய்ந்திரங்க
நல்லறமும் பேணாது நின்றே யார்ப்பரிக்க
திரைகடலும் ஓடியங்கே தம்முயிரைப் பேண
விரண்டவர்க் கெல்லாம் எங்கனம் ஆவலுண்டு
கருமையின் மேனியர் எனவசைமொழி கூற
கருமயிர் தன்னை நரையிராக்கி கவலையுமறந்து
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களுள்
பற்றிய செய்கையும் பரப்பிடு கொள்கையும்
கற்றிட நம்மவர் காரணி யாதெனில்
மற்றவர் புகழ்ந்திட முழுதுமே தழுவி
தரணியில் தமிழினம் பொய்தழிவெய்தி
காரணியின்றிக் கண்ணீர்க் கோலமாய்
பூரணவாழ்வு புரிந்திட்ட வகையில்
தாய்த்தமிழீழம் தறுகண் மிலேச்சரால்
மாய்த்திடலறியா மாற்றலர் தொழும்பராய்
தாய்பிறர் கைப்பட சகிப்பவனாகி
நாட்டிடை மாந்தர் பசியால் நலிந்திட - தன்னுதர
ஊட்டமே பெரிதாய்உண்டே நாள் தொறும்
சுற்றமும் நோக்கார் தோழமை மதியார்
அந்தகன் வரவறியா ஆடம்பரங்க ளெல்லாம்
சிந்தையிலே சிறகடித்துச் சிட்டாகப் பறப்பவர்கள்
உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்து மாற்றாமல்
வெற்றுத்தனம் போல்வார் மேதினியில் பலருண்டு
சிறுமையொடு மடமைகாணாக் கடமையிலே நினைவுந்தொலைத்து
களிப்புறு வகையிங்கு காண்பவர் வகையறிவோம்
ஒளியின்றி மலைபோல துயர்ச்சுமை பெரிதாகி
வெளியுலகங் காணாத வாழ்க்கையது மாறாமல்
எளிமையிலே நித்தம் ஏக்கமுடன் வாழ்கையிலே
நிலையான வருமானம் நலிவோடு செல்வதனால்
அலைமோதி நின்மதியை காணாதுய்கின்ற வேளை
விலைவாசி யேற்றமுற வேதனையால் மிகவாடி
மேலுஞ் சுமைகண்டு சுருண்டுவிழும் ஏழ்மைநிலை
நாளுந் தெரிந்திருந்தும் ஒன்ற உணராதார் ஈங்கு!
உடலதனை மூலமாக்கி தினமுழைத்து உருகிப் போய்
கடன்சுமையால் வருகின்ற துன்பக்கடல் மூழ்கி
அடைமழையில் நனைகின்ற காட்சியை அறிந்தபின்னும்
ஆறோடி வளங்கூட்டும் இரக்கமில்லா மானிடத்தில்
வேறாகி நின்றங்கே வாய்பிழந்து நகையாடி
நீறாகும் வரையங்கு நிந்தைபல செய்திடுவார்
கற்பூரம் போலக் கடலுப்பு இருந்தாலும்
கற்பூரம் போலாமோ கடலுப்பு
பொற்பூகும் புண்ணியரைப் போலிரு ந்தாலும்
புல்லியர் தாம் புண்ணியராவாரோ அதுபோல
உள்ளந் தொழுதேதும் உவந்தளிப்ப தல்லால்
எள்ளளவும் ஈயஇசையாமல் எள்ளியங்கு நகையாடி
தாமுங் கொடார் கொடுப்போரை ஈயவிடார்
சேமஞ் செய்வாரை சினமூட்டச் செய்திடுவார்
தேறாது அவர்மனதில் ஏழ்மையென்று விட்டால்
கூறாத வார்த்தையெல்லாம் கூறியின்ப முற்று
கழிவிரக்கங் கொள்ளாமல் காண்கின்ற களிப்பெல்லாம்
அழிமுதலைத் தேடுகின்ற அத்திவார மறியாரே
சீலமில்லான் ஏதேனுஞ் செப்பிடினும் இவ்விடத்து
தானந்தக் காலம் ஏழ்மையிடமறிந்து இகழாரே
சிற்றுணர்வார் என்றும் சிலுசிலுப்பார் ஆன்றுமந்த
முற்றுணர்ந்தோர் என்றும் மொழியாரே
மற்றொருகால் சிந்தையது நோகாமல் தப்புமவன் உத்தமனே
கருவுறும் ஏழையவன் துயர்களைய இருந்தவோர் -கேள்வி
திருந்திடும் உயிர்க்கு சிற்றறிவேன் சாற்றிடுகவியில்
சொற்சிலம்பாக ஒருபொருளாகி உவமைபெறாது
வேற்றோர் கருத்தில் ஏற்றோர்க்கிசையா பேதமிருந்தால்
புவனியில் வாழும் பெருந்தகை யறிவோர்
இவ்வகைக் கவியில் மருவிடு குற்றங்களைந்து
வேண்டார் ஆயினும் விளம்புவீர் இனிதே!!
அளவையூர்
கவிக்குமரன்