உந்தன் ஆட்சி பிணம் தின்னும் பட்சி
இலங்கை அரசே!!!!
இனவெறி உனக்கேன்?
உயிர்கள் துடிக்குது
உணர்வுகள் வெடிக்குது
உண்மைகள் மடியுது
உள்ளம் உடையுது
உந்தன் ஆட்சி
இரத்தக் காட்சி
மண்ணைப் பிடிக்க மனித உயிர்களை
குண்டுகள் போட்டு குதறி எடுத்து
எறிகணை வீசி சதைகளைப் பிடுங்கி
நித்தம் நித்தம் இரத்தம் சிந்தி
கொடூரம் செய்து நரபலி ஆக்கி
கொடுமைகள் செய்யும் இலங்கை அரசே!!!
நாட்டை நீ ஆள நர பலி வேண்டுமா?
பலியிடும் பீடம் தமிழரின் உயிரா?
பட்டினிச் சாவு பரந்து கிடக்குது
அனாதைக் குழந்தைகள் தொடர்ந்து பெருகுது
மண்ணை ஆழ மனிதர்கள் பலியா?
நோயில் மரிக்கும் எத்தனை மனிதர்கள்?
கர்ப்பிணித் தாயின் துயரம் எத்தனை?
கற்பை இழக்கும் பெண்கள எத்தனை?
காணாமல் போகும் மனிதர்கள் எத்தனை?
வன்முறையாகும் பெண்கள் எத்தனை?
வதங்கிச் சாவும் குழந்தைகள் எத்தனை?
வதைக்கும் முகாங்கள் எத்தனை எத்தனை?
மரண வேதனை உந்தன் ஆட்சி
மயான ஊர்வலம் எங்கும் காட்சி
வெறியின் ஆசனம் உந்தன் பட்சம்
அதிரும் கொலைகள் ஆட்சியின் உச்சம்.
உயிரைக் குடிக்கும் உந்தன் ஆட்சி
உண்மையில் அழியும் உலகம் சாட்சி
மறுப்பதற்கு இல்லை மரணங்கள் சாட்சி - நீ
மனிதன் இல்லை பிணம்தின்னும் பட்சி
திருமலைத்தென்னவன்