அன்புள்ள அம்மா....!!
உன் உயிரிலே கருவாகிய
எமக்காகவே எல்லாவற்றையும் அர்ப்பணித்து
உன் உதிரத்தால் எமக்குணவூட்டி
எம் உயர்ச்சியிலே மனமகிழ்ந்த
எம் அன்பு அம்மாவிற்கு...!!
பெண் பிள்ளை வேண்டும் என்று
தவமிருந்து பெற்ற பிள்ளை நானென்றால்..
உன்னை அன்னையாக அடைய நான்
எத்தனை ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்??
அறிவு தெரிந்த நாள் முதல்
உன் சேலைத் தலைப்பை இறுகப் பற்றியபடி
சுற்றி வரும் நான்..
நீ வேலை முடிந்து வீடு வரும் நேரம்
வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நான்..
உயர்தரம் படிக்குமளவு வளர்ந்து விட்ட பின்னும்
உன் மடியில் தலை வைத்து தூங்கும் நான்...
உன் கையால் உணவுன்பதற்காகவே
சாப்பிடாமல் காத்திருக்கும் நான்..
இன்று உனைப் பிரிந்து
தொலை தூரம் இருக்க வேண்டி வந் ததும்
கொடூரமான விதியின் ஒரு தண்டனை தான்...!!
3மணித்தியாலம் உனைப் பிரிந்து இருக்க மறுத்து
nurseryபோக அடம்பிடிக்கும் நானும்
classroomல் எனை உள்ளே விட்டு விட்டு
பெரிய பிரம்பை நீட்டி
என்னுடன் இருந்தால் அம்மாவை
அடித்து விடுவேன் எண்டு
வெருட்டி உனை வெளியே விட்டு கதவை மூடும்
Reeta teacher
என் மூன்றாம் வயதின் வில்லன்...
கட்டுரை பேச்சுப் போட்டி
என்றால்
எனக்கு ஒரு பரீட்சை என்றால்
முடிவுகள் வரும் வரை
என்னை விட அதிகமாக
ரென்சனாவது கூட நீ தான்..
படிக்கும் நாட்களிலே
ஒரு நாள் கூட காலை உணவு
பாணுண்டு நாமறியோம்..
பாடசாலைக்கு கூட அம்மாவின் கைச்சமையல் தான்
பொறாமையுடன் எனை நோக்கும்
சக தோழியரிடையே
collar upபண்ணும் நான்..
இன்று
உனைப் பிரிந்து இருப்பதனால்
எத்த்னை நாள் சாப்பிடாமல்
சென்றிருப்பேன்...
அதிகாலை எழும்பியவுடன்
அம்மா முகத்தைப் பார்க்கவேணும் என்பதற்காகவே
கண்களை இறுக மூடியபடி
உனைத்தேடும் நான்..
காலை முதல் மாலை வரை நடந்த சகலமும்
உனக்கு ஒப்பித்து விட்டு
மறுவேலை பார்க்கும் நான்..
உனக்கு வந்த அந்த promotionஆல்
கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டேன்...
கொஞ்சம் தடம் மாறி விழுந்து விட்டேன்..
ஆயினும்
அப்பாவும் நீங்களும்
என்மேல் காட்டிய அன்பு மீண்டும் எழுந்து
உறுதியாக நடக்க வைத்தது...!!
எம்மூவருக்குமான
உங்கள் அன்பில் பாரபட்சமில்லை
ஆயினும் எனக்கு மட்டும் நீ
அதிகமாக வேண்டும் என்று
ஆசைப்படுவது என் அறியாமை தான் ஆயினும்
மாற்றமுடியவில்லை..
எது கேட்டாலும் மறுக்காத
உன் இயல்பு..
ஆனால்
அன்று மட்டும் நீ
அவ்வளவு உறுதியாக மறுத்திருக்காவிட்டால்..
காலம் செய்த சதியில்
இன்று நான் எங்கோ
காணாமல் போயிருப்பேன் என்பது மட்டும்
அறுதியான உண்மை...
வி்டுமுறை நாள் எண்ணி
வீடு வரும் வேளை
சலுகையாக உன் மடியில்
ஏறிப் படுக்கும் பூனைக் குட்டியை
முறைப்பதுவும்..
பொன்குஞ்சு எனக் கொஞ்சும்
அம்மாவின் அரவணைப்பில்
மகிழ்வதுவும்
அவளிற்கு எல்லாமே அம்மா தான் எண்டு
சலித்துக் கொள்ளும் அப்பாவை
சமாளிக்க நான் படும் பாடு...
உங்கள் அன்பை எழுத
இன்றொரு நாள் போதாது..
எழுதியும் முடியாது...!!
இறைவன் என்பவரின் இருப்பு உண்மையென்றால்...
அவரிடம் வேண்டுவது இது ஒன்று மட்டும் தான்..
நானிருக்கும் காலம் வரை நீங்கள் என்னுடன் வேண்டும்..
என்னால் உங்கள் முகத்தில் தொலைந்த அந்த புன்னகை
மீண்டும் மலர அவனருள் வேண்டும்...
China மட்டும் யாழ்ப்பாணத்தின் அருகில்
இருந்து விட்டால்..
தினம் தினம் உங்கள் முகம் காண ஒடி வருவேன்...
ஆயினும் நான் கொடுத்து வைத்தது இவ்வளவு தான்...