சோகத்தின் உச்சிக்கே சென்ற உணர்ச்சிப் பிளம்புகள்!
உப்புவெளிக்குள்
உறவுகளே உங்களைப் புதைத்திட
எண்ணிடும் எதிரிகளின் முனைப்பு
புலம்பெயர் தமிழர் எங்களுக்குப் புரிகிறது!
வெள்ளமாக உங்கள் குருதி மண்ணை நனைத்திட
உணவுக்காய் வாய்பிளக்கும் குஞ்சுகளாய்
தாய்மண்ணில் நீஙகள்; தவித்திடும் தவிப்பறிந்து
திக்கெட்டும் வாழும் தமிழர் நாம் தவிக்கிறோம்!
குளிரென்றும், மழையென்றும் வெயிலென்றும் பாராமல்
நாடுநாடாக தொப்புள்கொடி உறவுகளே உங்களுக்காக
திரண்டு நிற்கின்றோம், உண்ணாநோன்பிருக்கின்றோம்
எங்கள் அன்னைபூமியதைக் காத்திட எண்ணியே
ஏற்றம் பெற்ற சுலோகங்கள் தான் எத்தனை?
கோடிட்டுக் காட்டியே கோசம் எழுப்புகின்றோம்
இவர்கள் செவிப்புலன்கள் என்ன? செத்துவிட்டதா¨
பூட்டிய கதவுக்குள் சர்வதேசம் பேசுவது என்ன?
இன்றுவரை மௌனம் ஏன்? எமக்குப் புரியவில்லை!
எங்கள் பூக்கள் நீங்கள் ஒரே இரவில்
பொஸ்பரஸ், இரசாயனக் குண்டுகளால் உடல்கள் சிதறி
எரிந்து பொசுங்குவதை எடுத்துக் கூறுகிறோம்
பலஸ்தீனத்தில் குண்டென்றால் உள்ளம் குமுறுகிறார்கள்
சோமாலியாவில், ருவண்டாவில் சலசலப்பென்றால்
மனமுருகி பரிதவிக்கும் பாழும் இந்த உலகம்
தமிழீழத்தில் குண்டென்றால் உணர்வேதுமில்லாமல்
மயான பூமியாகட்டும் என்றா? இந்த மௌனம்!
அங்கம் இழந்து உறவுகளையும் இழந்து
புத்தி சுவாதீனமாக
நீங்கள் தினம்தினம் பாடிடும் முகாரிராகம்
சர்வதேசத்திற்கு சங்கீதமாகத் தெரிகிறதா?
உங்கள் விழிநீர்க்கோலமது கண்டு கதறி மனமுருகிடும்
உங்கள் செல்லங்கள், உங்கள் பாசங்கள்
சோகத்தின் உச்சிக்கே சென்று உணர்சிப் பிளம்புகளாகி
போரை நிறுத்தி பசிக்கு உணவையளித்து
நோய்க்கு மருந்ததைத் தந்துதவிடு என்றே கதறுகிறோம்
கண்ணிருந்தும் குருடனாக நடித்திடும் இந்தச் சர்வதேசம்
இன்றே கண்ணைத் திறந்திடதா என ஏங்குகிறோம்
விக்கி நவரட்ணம்