இழந்து போனவைகள்…!
மிச்சமாய் இருக்கும்
ஒற்றைக் கால் கூட
அதிஸ்டம் தான்
இங்கே
இரண்டு கால்களும் தறிக்கப்பட்ட
பலரும் இருக்கையிலே….
பிச்சைக்காரனின் துணிபோல
முகம் எங்கும் கிழிபட்டு
ஒட்டுக்கள்.
அதுகூட கூடுதல் அதிஸ்டமாகிவிட்டது
ஏன் எனில்
பலருக்கு இங்கே முகங்களே
தறிக்கப்பட்டிருக்கையிலே…!.
உலக வரைபடம் போல
உடலெங்கும் தையல்கள்.
இதை விகாரமாக யாரும் நினைப்பதேயில்லை
அனைவருக்கும் பொதுவான
அடையாளம்
மாடுகளுக்கு குறிசுடுவதைப்போல
உடலெங்கம்
சன்னங்கள் கிழித்த கோடுகள்.
அங்கவீனர்களுக்கு
மட்டும் தான் இட ஒதுக்கீடு எனில்
அனைவருக்கும்
ஒதுக்க வேண்டும்….!
மட்டுவில் ஞானக்குமாரன்
(இலங்கை)