இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
மெனோபஸ் ஒரு பிரச்சனையா?
|
மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் மனமாற்றங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்லி யிருந்தேன். அதில் வாசகர்களின் பலவித சந்தேகங்கள் நிவர்த்தியாகியிருக்கும் என்று நம்புகிறேன். மாதவிடாய் நிற்கும் பீரியடில் மகளிர் மருத்துவரை அணுகி உடல்ரீதியான பிரச்னைகளுக்கு விமோசனம் கிடைக்க வழிசெய்யலாம். ஏனெனில், திருமணம் ஆனவருடங்களில் இருந்து மெனோபாஸ் காலகட்டம் வரை தாம்பத்ய உறவு, பேறுகாலம், மாதவிடாய்,கர்ப்பப்பை பிரச்னைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். அதனால், உங்களது கர்ப்பப்பை உட்பட உள்உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அதுமட்டும்
அல்லாமல் ரத்த அழுத்த நோய், இருதயக்கோளாறு, சர்க்கரை நோய், சைனஸ், ஆஸ்துமா
ஆகிய நோய்களை பாரமாக சுமக்கும் நாற்பத்தைந்து, ஐம்பது வயதில் தான்
மாதவிடாய் பருவமும் நின்று போகும். ஆனால்,
அதே வயதை நெருங்கும் ஆண்கள் இளமையுடன், செக்ஸ் விருப்பம் அதிகமுள்ளவராக
காணப்படுவார். டை அடித்துக் கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஜொள்ளு
விடும் இளைஞராக மாறிவிடுவார். அது உங்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தாலும்,
அதற்கு நீங்கள் அணை போட்டாலும் தங்களது ஆசை நெருப்பை வேறு சேனலில்
அணைப்பதில் குறியாக இருப்பார். பெண்களும்
எப்படியோ தங்களைத் தொந்தரவு பண்ணாமல் இருந்தால் சரி என்று கண்டுகொள்ளாமல்
இருந்தாலும், தன் மனைவியைவிட்டு அழகு போய்விட்டது என்றதும் ஒருவித சலிப்பு
தோன்றுவது இயற்கை. உடலோடு கலந்துவிட்ட உணர்ச்சிகளுக்கு ஆண்கள் வடிகால்
தேடுவது சகஜமான ஒன்று. அதற்காக ஆண்களின் எல்லையில்லா ஆசைகளுக்கு எந்தப்
பெண்ணும் ஈடுகொடுப்பது இயலாத ஒன்று. அதனால் தான் மீசை நரைத்தாலும், ஆசை
நரைக்காது என்பார்கள். சில
ஆண்கள் கூட மனைவியிடம் தாம்பத்ய சுகத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட
வயதுக்கு மேல் நோய்வாய்பட்ட மனைவியை தொந்தரவு செய்வதைவிட, அவளுக்கு ஆதரவாக
அன்பால், பாசத்தோடு கவனிக்கும் இருக்கிறார்கள். ஆனாலும், அந்த உறவுக்கு
சந்தர்ப்பம் கிடைத்தால் விடமாட்டார்கள். இப்படித்தான்,
ஐம்பது வயதான காந்திமதியால் வீட்டு வேலைகளைக் கூட நிம்மதியால் செய்ய
முடியாது. திருமண வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் குணசீலன் அரசு
அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தன் மனைவி காந்திமதிக்கு மருந்து
மாத்திரை வாங்கிக்கொடுப்பதிலேயே அவருக்கு சலித்து போய்விட்டது. தன்
மனைவியிடம் தாம்பத்ய உறவுக்கு கிடைக்கவில்லையென்ற ஏக்கம் அவரது மனதில்
உருவாகிக் கொண்டே இருந்தது. அதற்காக,
மனைவியை கிளினிக்குக்கு அழைத்துசென்றாலும் நர்ஸ்களிடம் அசடு வழிவார்.
வலியச் சென்று பேசுவார். இதைப் பார்த்த மனைவி காந்திமதிக்கு ஆத்திரம்
வரும். இந்த வயசுல போய் பல் இளிக்க வேணுமா? என்று காந்திமதி திட்டுவார். ஒருநாள்
காந்திமதி வீட்டுக்கு தோழியோட தங்கை சுமதி வந்தாள். அவளுக்கு குணசீலனின்
பேச்சு ரொம்பவும் பிடித்து போய்விட்டது. இருவரும் பல விஷயங்களைப்
பேசினார்கள். அன்றிலிருந்து சுமதி அடிக்கடி வர ஆரம்பித்தாள். குணசீலனின்
போக்கில் பலமாற்றங்கள். சுமதியை தனது அலுவலகத்திற்கு வரச் சொல்லி
பேசினார். மற்றொரு
நாள், காந்திமதி ட்ரீட்மெண்ட்டுக்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டாள்.
அன்று சுமதியும் தற்செயலாக வீட்டுக்கு வர, குணசீலன் இதுதான் சமயமென்று
சுமதி காலைப் பிடித்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். தடுமாறிப்போன சுமதி
குணசீலனின் ஆசைக்கு இணங்குவதைத் தவிர வேறுவழியில்லை. அந்த உறவு தொடர
ஆரம்பித்துவிட்டது. தன் ஆசைகளை சுமதியிடம் தீர்த்த மகிழ்ச்சியில் மனைவி
காந்திமதியை அடியோடு மறந்துபோனார். பலநாள்
திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல சுமதி-குணா உறவு
அம்பலமாகிப்போனது. காந்திமதி தற்கொலை வரைக்கும் சென்றுவிட்டார். அப்புறம்
குணசீலன் திருந்தினாரா? இல்லை. சுமதி போல் பல பெண்களிடம் தொடர்பு வைத்துக்
கொண்டிருக்கிறார். ஆக,
தன் மனைவி தாம்பத்ய உறவுக்கு லாயக்கற்று போய்விட்டாள் என்று தெரிந்து தான்
குணா தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்திவிட்டார். இது எத்தனையோ
குடும்பங்களில் தெரிந்தும் தெரியாமலும் நடக்கிறது. அதற்காக கணவனை நொந்து
கொள்ளாமல் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. அவர்களாகவே மனசாட்சிக்கு
பயந்து மனக்கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் தான் பிரச்னை தீர வழி. இந்த மாதிரி தங்களது செயல்களுக்கு அவர்கள் சொல்லும் டயலாக் என்ன தெரியுமா? இத்தனை வருடங்கள் அவளுடன் ஒழுங்கா குடும்பம் நடத்தலையா? பிஸி,டென்ஷன் வடிகாலுக்கு வேறு சேனல் தான் லாயக்கு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், பெண்கள் கவலை, குடும்ப பொறுப்பு, கணவனுக்கு பணிவிடை என்று எத்தனையோ பிரச்னைகளில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நாங்க மட்டும் தடம் மாறுகிறோமா? என்று கோபமாக கேட்கிறார்கள். அதுவும் நியாயம் தானே |