தனுசு |
(90/100) + வீடு வாங்கலாம், - உறவினர்களால் பிரச்னை குரு
பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர
ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். மூலம், பூராடம், உத்திராடம் 1 சுறுசுறுப்புடன் செயல்புரியும் தன்மையுள்ள தனுசு ராசி அன்பர்களே! உங்கள்
ராசிக்கு இரண்டாம் இடத்தில் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி
உள்ளார். உங்கள் வாழ்வை வளமாக்க வாராது வந்த மழைபோல இந்த குருபெயர்ச்சி
அமைந்துள்ளது. குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 6, 8, 10 ஆகிய
இடங்களை பார்க்கிறார். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் குரு
அமர்ந்துள்ளதால் பேச்சில் கனிவு பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை
அதிகரிக்கும். பணவரவு அதிகம் பெற புதிய வழிகள் தோன்றும். இளைய
சகோதரர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
அவர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம். சமூகத்தில் அந்தஸ்து தரும் பதவி,
பொறுப்பை பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் மகிழ்ச்சி தரும் நற்பலன் உண்டு.
வெகுநாள் திட்டமிட்ட புதிய வீடு, புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
புத்திரர்கள் படிப்பில் சிறந்து தரத்தேர்ச்சி பெறுவர். படித்து முடித்த
புத்திரர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். குலதெய்வ வழிபாடை
செயல்படுத்தி மகிழ்வீர்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் வருமானமும்
அதிகரிக்கும். எதிரிகள் அச்சப்படும் வகையிலான புதிய சூழ்நிலை ஏற்படும். வழக்கு
விவகாரத்தில் அனுகூல தீர்வு கிடைக்கும். கடன்கள் தீர்ந்து விடும்.
உடல்நிலை மிக நன்றாக இருக்கும். கணவன், மனைவி உறவு ஒற்றுமையுடன்
விளங்கும். நண்பர்களுடனான நிலையும் இப்படியே. துன்ப நிகழ்வுகள் அணுகாத,
பாதிக்காத நன்னிலையை குருவின் பார்வை உருவாக்கும். குடும்பத்தில் சுப
நிகழ்வுகள் நல்லபடியாக நடந்தேறும். வெளியூர் பயணம் மகிழ்ச்சியையும்
பணவரவையும் பெற்றுத்தரும். தொழிலதிபர்கள்:
தொழில்சார்ந்த வகையில் முன் எப்போதும் இல்லாத அளவில் அபரிமிதமான வளர்ச்சி
ஏற்படும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். ஆதாய பணவரவை
சேமிப்பாக மாற்றுவீர்கள். இரும்பு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,
டெக்ஸ்டைல்ஸ், காகிதம், கம்ப்யூட்டர், மொபைல், விளையாட்டு சாதனம், அழகு
சாதனம், தோல் பொருட்கள், பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள் உற்பத்தி
செய்வோர் அதிக உற்பத்தியாலும் விற்பனையாலும் மகிழ்வர். போட்டி பெருமளவு
குறையும். உங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் சிறந்த வரவேற்பு
கிடைக்கும். கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், அச்சகம், ரியல் எஸ்டேட்,
டிராவல்ஸ், நட்சத்திர ஓட்டல் ஆகிய தொழில் செய்பவர்களும், மற்ற தொழில்களில்
உள்ளவர்களும் கூட தொழில்வளம் சிறந்து அபிவிருத்தி பணிகளையும் திறம்பட
நிறைவேற்ற கிரக நல்லருள் உள்ளது. வியாபாரிகள்:
நகை, ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல், வீட்டு உபயோக சாதனங்கள்,
மின்சார பொருட்கள், அலங்கார பொருள், ஓட்டல், பேக்கரி, பர்னிச்சர்,
பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி, ஸ்டேஷனரி, மளிகை, மருந்து, எண்ணெய், வாசனை
திரவியம், பெயின்ட், விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்பவர்கள் அபரிமிதமான
தொழில் வளர்ச்சியும், ஆதாய பணவரவும் பெறுவர். வியாபார அபிவிருத்தி பணி
சிறப்பாக நிறைவேறும். சரக்கு வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள். புதிய
கிளை துவங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலில் கூட்டுசேர முயற்சிப்பவர்களை
கண்டிப்பாக ஒதுக்கிவிடுங்கள். பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தனக்கென தரப்பட்ட பணியை எளிதாக
நிறைவேற்றுவர். கூடுதல் சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள்
கிடைக்கும். மற்ற துறைகளை விட, கம்ப்யூட்டர் சார்ந்த பணியாளர்கள் இந்த
குருபெயர்ச்சி கால கட்டத்தில் மிக அதிக வருமானம் பெறுவர். அலுவலகத்தில்
சிலருக்கு இருந்த இக்கட்டான நிலையின் பிடியில் இருந்து விடுபட குருவருள்
கிடைக்கும். சக ஊழியர்கள் நல்லபடியாக ஒத்துழைப்பு தருவார்கள். பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி
இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். சக பணியாளர்களும் உங்களின் உதவியை
நாடிப்பெறுவர். பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் எளிதில் கிடைக்கும்.
குடும்ப பெண்கள் கணவரின் அன்பையும், நிறைவான பணவசதியும் பெற்று
குடும்பத்தை மகிழ்ச்சி பாதையில் நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் உடல் ஆரோக்கியம் பலம்
பெறும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் தொழிலை
அபிவிருத்தி செய்வர். வியாபாரம் சிறந்து லாபம் அதிகரிக்கும். மாணவர்கள்:
வணிகவியல், அக்கவுன் டன்சி, நிதிநிர்வாகம், ஏரோநாட்டிக்கல், கேட்டரிங்,
கம்ப்யூட்டர், சட்டம், சிவில் இன்ஜினியரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மரைன், வேதசாஸ்திரம், ஓவியப் பயிற்சி பெறும்
மாணவர்கள் தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களையும் விட நன்றாகப்
படிப்பர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். படிப்பை நிறைவு செய்யும்
நிலையில் உள்ள மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். சக மாணவர்களிடம் நட்புறவு
வளரும். அரசியல்வாதிகள்:
சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். ஆதரவாளர்கள் அதிகரிப்பர்.
உங்களுக்கு கிடைக்கும் வெற்றியைக் கண்டு எதிரிகளும் ஒரு கணம் திகைத்து
நிற்பர். கடந்த காலங்களில் நீங்கள் வைத்த மக்களுக்கான கோரிக்கையை அரசு
அதிகாரிகள் தாமாக முன்வந்து நிறைவேற்றி உங்கள் பணிக்கு கூடுதல் பெருமை
சேர்ப்பர். புத்திரர்களை அரசியலில் ஈடுபடுத்தினால் கெட்ட பெயர் ஏற்பட
வாய்ப்புண்டு. கவனம். அரசியல் தவிர தொழில், வியாபாரம் நடத்துபவர் திறமை
மிகுந்த பணியாளர்களின் உதவியால் தொழில் வளர்ச்சியும் தாராள பணவரவும்
கிடைக்கப்பெறுவர். புதிய பதவி கிடைக்கும். விவசாயிகள்:
புதிய உழவுக்கருவிகள் வாங்குவீர்கள். கடன் வசதி எளிதாகக் கிடைக்கும்.
மகசூல் அதிகரிப்பும், பணவரவில் திருப்தியும் உண்டு. கால்நடை
வளர்ப்பினாலும் கூடுதல் பணம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகள்
தீர்ந்து போகும். நீங்கள் செய்ய வேண்டியது: நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதால் வெற்றிகள் பலவும் பெறுவீர்கள்.கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும் அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான் |