(90/100) + நினைத்துப் பாராத பணம், - ஒன்றுமே இல்லைங்க
குரு
பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர
ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2
கலைரசனை மிகுந்த கன்னி ராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு ஐந்தாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சிரம பலன்களை அனுபவித்திருப்பீர்கள்.
இப்போதைய குருபெயர்ச்சி உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
மகரத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 9, 11ம்
இடங்களையம், ராசியையும் பார்க்கிறார். குரு அமர்ந்த இடமும், பார்வை பெற்ற
இடங்களும் உங்களுக்கு நிறைந்த நற்பலனைத் தரும் வகையில் உள்ளது. மனதில்
உற்சாகத்துடன் செயல்புரிவீர்கள். பெரும்பாலான செயல்பாடுகளில் முழு வெற்றி
கிடைக்கும். நடை, உடை, பேச்சில் தோரணை ஏற்படும். நினைத்து பார்த்திராத
வகையில் பணவரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன்
நடந்துகொள்வர். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின்
சுபமங்கல நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் வாய்ப்பு நிறைவேறும். வீடு,
வாகனம் சார்ந்த வகையில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள்.
தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.
புத்திரர்,
பெற்றோரின் எண்ணங்களை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்வர். புதிய சொத்து
வாங்கும் எண்ணம் திட்டமிட்டபடி கைகூடும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக
துணை நிற்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு குருவருளால் நற்பலன்
உண்டு. உடல்நலம் பலம் பெற்று திகழும். கடந்த வருடங்களில் ஏற்பட்ட பணக்கடனை
பெருமளவில் சரிசெய்வீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூல வெற்றி
கிடைக்கும். குடும்பத்தில் நிறைவேற்ற வேண்டிய சுபநிகழ்ச்சியை தாராள
பணச்செலவில் மகிழ்வுடன் நடத்துவீர்கள்.
கணவன்
மனைவி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி
தழைக்கச்செய்வர். உங்களின் சமூக அந்தஸ்து உயர நண்பர்கள், புதிய
திட்டத்துடன் அணுகுவர். இதனால் மிகுந்த நன்மை ஏற்படும். ஆபத்து எதுவும்
அணுகாது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்கால தேவைக்கு
பணசேமிப்பும் உருவாகும். சுற்றுலா மேற்கொள்வீர்கள். புதியவர்களின் நல்
அன்பை பெறுவீர்கள்.
தொழிலதிபர்கள்:
டெக்ஸ்டைல்ஸ், கம்ப்யூட்டர், மருந்து, வீட்டு அலங்கார பொருட்கள், காகிதம்,
மரத்தொழில், மலைத்தோட்டப் பயிர், தோல், பிளாஸ்டிக், பிளக்ஸ்,
மின்சாதனங்கள் தயாரிக்கும் தொழிலதிபர்கள் உற்சாகமாக செயல்புரிந்து
தொழிலில் வளர்ச்சி காண்பர். தாராள பணவரவு கிடைக்கும். கல்வி நிறுவனம்,
தொழிற்பயிற்சி பள்ளி, எண்ணெய் ஆலை, அச்சக அதிபர்கள் இவர்களையும் விட அதிக
லாபம் சம்பாதிப்பர். நிறுவனங்களில் விரிவாக்கப்பணிகள் செய்ய வாய்ப்புண்டு.
புதிய தொழில் துவங்க வெகுகாலம் திட்டமிட்ட வாய்ப்பு இனிதே நிறைவேறும்.
அனைத்து தொழிலதிபர்களுக்கும் இந்த குருபெயர்ச்சி ஆதாய நற்பலனையே தரும்.
வியாபாரிகள்:
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஜவுளி, நகை, மின்சார சாதனங்கள், கட்டுமானப்
பொருட்கள், பர்னிச்சர், காய்கறி, மலர், விவசாய இடுபொருட்கள், ஸ்டேஷனரி,
பேக்கரி சாமான்கள், விளையாட்டு சாதனங்கள், மருந்து, அழகு சாதன பொருட்கள்,
வாசனை திரவியங்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் விற்பனையால் ஆதாய பணவரவை
பெறுவர். மற்ற வியாபாரிகளுக்கும் ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே. வியாபாரத்தில்
புத்திரரின் பங்கு பெருமளவில் துணை நிற்கும். அபிவிருத்தி முயற்சிகள்
வெற்றி பெறும். சிலருக்கு புதிய கிளை துவங்கவும், சொந்த கட்டடம் கட்டவும்
அனுகூல பலன் உண்டு.
பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது சுயதிறமைகளை
வெளிப்படுத்தி பணியில் சிறப்பிடம் பெறுவர். நிர்வாகத்தின் அன்பிற்கு
உட்படுவீர்கள். கவுரவமும் சலுகையும் கிடைக்கும். பள்ளி, கல்லூரி, அச்சகம்,
ஓட்டல், டிபார்ட்மென்டல் ஸ்டோர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, சாய
தொழிற்சாலை, ரெடிமேட் ஆடை உற்பத்தி, மார்க்கெட்டிங், பர்னிச்சர், கலை
அழகுப் பொருட்கள் உற்பத்தி, மின்சாதனங்கள் பழுதுநீக்குதல், கட்டுமான
பணிகள் உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் திறமைமிகு
பணியினால் கூடுதல் வேலைவாய்ப்பும் அதிக சம்பளமும் கிடைக்கப்பெறுவர். சக
பணியாளர்களுடன் சுமூக நட்புறவு இருக்கும்.
பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு உரிய பொறுப்பை
உணர்ந்து சிறப்புடன் செயல்படுவர். பணி இலக்கு எளிதில் பூர்த்தியாகும்.
பணவரவை நகையாகவும் சேமிப்பாகவும் மாற்றுவீர்கள். குடும்ப பெண்கள் உற்சாக
மனதுடன் செயல்புரிந்து குடும்பத்தை வளமை பெறும் நிலைக்கு கொண்டுவருவர்.
புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு குருவருளால் நற்பலன் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி
பணியை நிறைவேற்றுவர். ஆதாய பணவரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு
கணவரின் உதவி பெரிதும் துணை நிற்கும்.
மாணவர்கள்:
சட்டம், இலக்கியம், ஓவியம், சிற்பக்கலை, கம்ப்யூட்டர், வங்கியியல்,
தணிக்கையியல், கேட்டரிங், மாடலிங், அனிமேஷன், ஆசிரியர் பயிற்சி,
ஜர்னலிசம், சிவில் இன்ஜினியரிங், விவசாயம், ஏரோநாட்டிக்கல், மரைன்,
டிரைவிங், மருத்துவம், சினிமா பயிற்சிகள், ரசாயனம், பவுதிக மாணவர்கள்
கவனமாகப் படித்து தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினருக்கும் படிப்பில்
பாதகமில்லை.
அரசியல்வாதிகள்:
உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய ஆதரவாளர்கள் வந்து சேர்வர்.
உங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிப்போவர். அரசு
அதிகாரிகளிடம் இதமாக நடந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களை
அரசியலில் புகுத்த சரியான நேரம்.
விவசாயிகள்:
பயிர் வளர்க்க தேவையான அனைத்து அம்சங்களும் அனுகூலமாகவே கிடைக்கும்.
மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான அளவில் பணவரவு
கிடைக்கும். சிலருக்கு புதிய நிலம் வாங்குவதற்கான யோகபலன் குருவருளால்
உண்டு.
நீங்கள் செய்ய வேண்டியது:
தஞ்சாவூரில் உள்ள குபேரபுரீஸ்வரர் (தஞ்சபுரீஸ்வரர்) கோயிலுக்கு சென்று
வணங்கினால், பணவரவு மேலும் அதிகரிக்கும். வீட்டில் ஏதாவது ஒரு வெள்ளியன்று
குபேர பூஜை நடத்தவும்.
கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!