கும்பம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3
கவனம் (45/100)
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது
ஆகியவற்றில் வருட முற்பகுதியில் கேதுவும், வருடத்தின் பிற்பகுதியில்
ராகுவும் அபரிமிதமான நற்பலன்களைத் தரும் நிலையில் உள்ளனர். குரு,
சனியினால் ஏற்படும் அனுகூலக்குறைவை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம்
ஏற்படும். இனிமையாக பேசுவதால் மட்டுமே சிரமங்களை தவிர்க்க இயலும். பணவரவு
நன்றாக இருக்கும்.
வீடு,
வாகன வகையில் அபிவிருத்தி பணிகள் செய்வது இப்போதைக்கு நல்லதல்ல.
புத்திரர்கள் சேர்க்கை சகவாசத்தால் கெட்டுப்போக வழியுண்டு. கடன்
வசூலாகும். பொன், பொருள் சேர்க்கை எதிர்பாராத வகையில் கிடைக்கும்.
எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் விலகும். வழக்கு விவகாரத்தில் அனுகூல வெற்றி
உண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும் சேர்ந்து கொள்வதுமாக
இருப்பர். வரும் புரட்டாசியில் சனி பெயர்ச்சியாகி அஷ்டமச்சனி என்ற நிலை
பெறுகிறார். இதனால் தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு பணம், பொருளை
இழக்க நேரிடும். தொழில் சார்ந்த வகையில் இருக்கும் அனுகூலத்தை
பாதுகாத்துக் கொள்வது சிறந்தது. வெளிநாடு வேலை வாய்ப்பில் எதிர்பார்ப்பு
நிறைவேறும்.
தொழிலதிபர்கள்:
கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட் அதிபர்கள், வாகன விற்பனையாளர்கள், ஸ்டீல்
பொருட்கள், காகிதம், அலங்காரப் பொருட்கள், உணவு பண்டங்கள், மலைத்தோட்ட
பயிர், கட்டுமானப் பொருட்கள், குளிர்பானம் உற்பத்தி செய்பவர்கள் தங்கள்
டீலர்களை இழக்க நேரிடும். தொழிலாளர்களாலும் பிரச்னை ஏற்பட்டு உற்பத்தி
குறையலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பொருட்களை சந்தைப்படுத்த ஆகும்
செலவும் கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, பழங்கள், குளிர்பான வகைகள், மலர்கள், காய்கறி, இறைச்சி,
மருந்து, பால் பொருட்கள், பலசரக்கு, சணல் பொருட்கள், இரும்பு, பாத்திரம்,
உணவு பண்டங்கள், சமையல் எண்ணெய், மசாலா வகைகள், மின்சார உபகரணம் வியாபாரம்
செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபம் எதிர்பார்ப்பதற்கில்லை. பழைய
வாடிக்கையாளர்கள் சிலர் இடம் மாறிப் போக வழியுண்டு. அவர்களிடம் கனிவாகப்
பேசி தக்க வைத்துக் கொள்ளுங்கள். தகுதிக்கு மீறிய வகையிலான கடன் வாங்கும்
நிலை சிலருக்கு வரலாம். போட்டி இருக்கும் என்றாலும் அது தாக்குப்பிடிக்க
கூடிய அளவில் அமையும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, நிர்வாகத் தரப்பில் நெருக்கடி
அதிகரிக்கும். அவர்கள் தரும் பணியைச் செய்வதில் தடங்கல் ஏற்பட்டு,
அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சம்பளத்தை விட செலவு அதிகரிக்கும்.
கடன் தொல்லைக்கு ஆளாகலாம். இந்த சமயத்தில் பொறுமையாக அனைத்தையும்
சகித்துக் கொள்வதே எதிர்காலத்துக்கு நல்லது. சகபணியாளர்களுடன் தேவையற்ற
விவாதம் ஏற்பட்டு பின்னடவை ஏற்படுத்தும். செப்டம்பரில் நிகழும்
சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அஷ்டமத்து சனியாக இருப்பதால், இடமாற்றம்,
ஒழுங்கு நடவடிக்கை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
மாணவர்கள்:
பிரிண்டிங் டெக்னாலஜி, மருத்துவம், பவுதிகம், ரசாயனம், கம்ப்யூட்டர்,
தகவல் தொழில் நுட்பம், கேட்டரிங், நிர்வாகப் படிப்புகள், சிவில்
இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல், சட்டம், வெல்டிங், டர்னிங், பயோகெமிஸ்ட்ரி
மாணவர்கள் படிப்பில் பின்தங்க நேரிடும். மற்றவர்கள் சுமாராகப் படிப்பர்.
ஆன்மிக நம்பிக்கையுள்ளவர்கள் கிரக நிலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், வேலைகளை அன்றாடம் முடிக்க முடியாத
அளவுக்கு பணிப்பளு கூடும். முடிக்காத பணிகளுக்காக அதிகாரிகளின்
அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். சலுகைகள் அதிகமாக இருக்காது. சம்பள
உயர்வு சுமாராகவே இருக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் சுமூக உறவு
கொள்வர். குடும்பச் செலவுக்கு திண்டாட்டமாகவே இருக்கும். சுயதொழில்
புரியும் பெண்கள், கூடுதல் மூலதனம் இட்டால் அதை இழக்க நேரிடும். பணிப்பளு
அதிகரிக்கும். பொறுமையாக நடப்பதன் மூலம் இருக்கிற வியாபாரத்தைத் தக்க
வைத்துக் கொள்ளலாம்.
அரசியல்வாதிகள்:
அரசியலில் எதிர்வரும் குறுக்கீடுகளை சமாளிக்க அதிக சிரமப்பட
வேண்டியிருக்கும். ஆதரவாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பர் அல்லது கோரிக்கைளை
நிறைவேற்றும்படி வலியுறுத்தி தொல்லை தருவர். அரசு தொடர்புடைய பணிகள்
அவ்வளவு எளிதில் நடக்காது. எதிரிடையாக செயல்படும் ஒருவர் உங்களுக்கு
மறைமுகமாக உதவ முன்வருவார். புத்திரர்களால் இடைஞ்சல் ஏற்படும். அரசியலுடன்
தொழில் நடத்துபவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது.
விவசாயிகள்:
விவசாயபணிகளில் ஆர்வக்குறைவு ஏற்பட்டு மகசூல் குறையும். சாகுபடி செலவு
கூடுதலாகும். கால்நடை வளர்ப்பிற்கு செலவு கூடினாலும், அதற்கேற்ற வருமானம்
பெறுவீர்கள். நிலம் தொடர்பான விவகாரங்களில் அனுகூலத் தீர்வு பெற
ராகுபெயர்ச்சி உறுதுணையாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளை எளிமையான முறையில்
நடத்துவீர்கள்.
பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் பணச்சிக்கல் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.
செல்ல வேண்டிய தலம்: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்
பரிகாரப் பாடல்:
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியின் அணிக்கழகே அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே!