மகரம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
தேவை பொறுமை (55/100)
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது
ஆகியவற்றில் வருடத்தின் பிற்பகுதியில் கேதுவும், வருட துவக்கத்தில் மூன்று
மாதம் குருவும் நல்ல பலன்களைத் தரும் வகையில் உள்ளனர். அஷ்டமத்து சனி
இன்னும் ஐந்து மாதங்களில் முடிகிறது என்பதால், அதுவரை பொறுமையாக
இருக்கவும். கோபதாபம் குறைந்து சாந்த எண்ணம் மேலோங்கும். வீடு, வாகனம்
சார்ந்த வகையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதுமென்ற நிலை இருக்கும்.
அஷ்டமத்து சனியினால் செப்டம்பருக்குப் பிறகு அபிவிருத்தி பணிகளை செய்தால்
போதும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக
கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இதுகாலம் உங்கள் வாழ்வில்
மறுமலர்ச்சியும், தாராள பணவரவும், குடும்பத்தில் மங்கல நிகழ்வும்
ஏற்படும். உங்கள் உடல்நலத்துடன் புத்திரர்களின் உடல்நலமும் பாதிக்கப்படக்
கூடும். பூர்வ சொத்தில் வருமானம் சுமாரான அளவில் கிடைக்கும். வழக்கு
விவகாரங்களில் சிக்குவதற்கு வாய்ப்புண்டு. குடும்பத் தேவைகளுக்காக
சேமிப்பு பணத்தைச் செலவு செய்வதும் கடன் பெறுவதுமான தன்மை இருக்கும்.
தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வெளிநாடு
வேலைவாய்ப்பிற்கு குறைந்த அனுகூலமே உள்ளது.
தொழிலதிபர்கள்:
இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், காகிதம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள், பால் பொருட்கள், வாசனைத் திரவியம், வீட்டு அலங்காரப்
பொருட்கள், பிளாஸ்டிக், மரத்தொழில் செய்வோர் கடும் முயற்சி செய்தாலும்
அளவான லாபமே சம்பாதிக்க முடியும். பால்பொருட்கள், மோட்டார்
உதிரிப்பாகங்கள், உழவுத்தொழில் கருவிகள், உற்பத்தி செய்பவர்கள் புதிய
ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட
வருமானம் அதிகமாக இருக்கும். அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முற்பட
வேண்டாம். தொழிலில் புதிய பார்ட்னர்களையும் சேர்த்தாலும் சிரமமே.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள்,
மருந்து, காய்கறி, பழம், பேக்கரி, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், அழகுசாதனப்
பொருட்கள், கட்டுமானப் பொருள், அலங்காரப் பொருட்கள், பால் பொருட்கள்
வியாபாரம் செய்பவர்கள் சுமாரான வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கு இவர்களை
விட அதிக லாபம் இருக்கும். நிர்வாகச் செலவு அதிகரித்து கடன் வாங்கும் நிலை
ஏற்படும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்கள் சோம்பல் அதிகரிப்பால் பணியில்
தொய்வு ஏற்பட்டு அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர். சிலருக்கு ஒழுங்கு
நடவடிக்கைக்கு உட்படும் கிரகநிலை உள்ளது. கவனம். இயந்திரம், கொதிகலன்,
மின்சாரம், தொழில்நுட்ப பணி போன்றவற்றில் உள்ளவர்கள் பாதுகாப்பு
நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சகபணியாளர்களுடன் கருத்து
வேறுபாடு ஏற்படும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற நிர்வாகத்திடம் கடன்
வாங்க வேண்டி வரும். சலுகைகள் பெரிய அளவுக்கு இராது. மே, ஜூன், ஜூலை
மாதங்களில் குரு பார்வையால் குறைகள் விலகி வளர்ச்சித் தன்மை ஏற்படும்.
மாணவர்கள்:
தகவல்தொழில் நுட்பம், சிவில் இன்ஜினியரிங், விவசாயம், மருத்துவம், சினிமா
தொழில்நுட்பம், மாடலிங், இசை, நடனம், ஓவியம், கேட்டரிங், அழகுக்கலை,
சட்டம் உட்பட பல்வேறு துறையில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு கவனச்சிதறல்
ஏற்பட்டு படிப்பு பின்தங்கும். படிப்புக்குரிய செலவுக்கும் திண்டாட்டமாகவே
இருக்கும். பயணங்களின் போது பாதுகாப்பு அவசியம் தேவை.
பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களின் பணிகளில் தொய்வு ஏற்படும்.
நிர்வாகம் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் பணியாற்றி அவர்களால்
கண்டிக்கப்படவும் வாய்ப்புண்டு. பணம் கொடுக்கல், வாங்கலில் எவருக்காகவும்
பொறுப்பேற்ககூடாது. குடும்பப் பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட
வேண்டியிருக்கும். புத்திரர்களை ஒழுங்குபடுத்துவதற்குள் போதும்
போதுமென்றாகி விடும். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபமே காண
முடியும். அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டால் பிரச்னையும் பணஇழப்புமே
ஏற்படும்.
அரசியல்வாதிகள்:
ஆதரவாளர்களின் உதவியுடன் அரசியலில் பலம்பெறும் வாய்ப்புகளை சரியாக
நிறைவேற்றுவீர்கள். பணச்செலவு அதிகரிக்கும். எதிரியின் தொந்தரவால் சில
அனுகூலங்களை பெறுவதற்கு தாமதமாகும். புத்திரர்களின் விருப்பத்தை அரசியலில்
செயல்படுத்த வேண்டிய கட்டாயம் வரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அரசு
தொடர்புடைய அனுகூலங்களை எளிதாக பெறுவீர்கள். தகுதிக்கு மீறிய
விவகாரங்களில் தலையிட்டு கெட்ட பெயரும், சட்ட சிக்கலும் வரும். அரசியலுடன்
தொழில் நடத்துபவர்கள் சுமாரான வருமானமே காண்பர்.
விவசாயிகள்:
மகசூல் சுமாராகவே இருக்கும். சாகுபடி செலவு மிகவும் அதிகரிக்கும். கால்நடை
வளர்ப்பிலும் சுமாரான அளவிலேயே பணம் கிடைக்கும். மே, ஜூன், ஜூலை
மாதங்களில் அனைத்து வகையிலும், வளர்ச்சியும், வருமானமும் கூடும். இது
காலம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் நடைபெற வழிபிறக்கும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.
செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
பரிகாரப் பாடல்:
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடும் தனதடி வழிபடும் அடியவர்
கடிகணபதி வரஅருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.