கடகம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
யோகம் (75/100)
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது
ஆகியவற்றில் குரு நற்பலன் வழங்கும் இடத்தில் உள்ளார். ராகுவும், சனியும்
செப்டம்பருக்குப் பிறகு அனுகூலம் தரும் இடங்களுக்கு பெயர்ச்சியாகிறார்கள்.
இதனால் வாழ்வில் வளம் பல பெறுவீர்கள். தற்போது ஏழரைச் சனியில் வாக்குச்சனி
என்ற நிலை உள்ளது. இதனால் பேச்சில் நிதானம் தவறும். செப்டம்பருக்குப்
பிறகு பொறுமையான மனப்பான்மை ஏற்படும்.
வீடு, வாகன வகையில்
சனிப்பெயர்ச்சிக்கு பின் வளர்ச்சிமாற்றம் ஏற்படும். புத்திரர்கள்
பிடிவாதமான குணத்துடன் செயல்படும் கிரகநிலை உள்ளது. ஏழரைச் சனி விலகும்
காலத்திற்குள் குலதெய்வ வழிபாடு செய்து கொண்டால், அதன் பின்னுள்ள
காலத்தில் சிரமங்கள் குறையும். உடல் நலம் சுமாராக இருக்கும். குருபகவான்
அதிகார வக்ரகதியாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் கும்பராசியில் அமர்வு
பெறுகிறார். இந்த சமயங்களில், வாகன பயணத்தில் மிதவேகம் அவசியம். தம்பதியர்
இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். அறிமுகம் இல்லாத பெண்களால் இடையூறு
ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. நண்பர்களுடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக
பிரச்னை ஏற்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான கிரக நிலை குறைந்த
அனுகூலத்தில் உள்ளது.
தொழிலதிபர்கள்:
டெக்ஸ்டைல்ஸ், பால்பொருட்கள், வாசனை திரவியங்கள், உழவு உபகரணம், படகு,
தண்ணீர் சார்ந்த பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்,
ஆடம்பர வீட்டு உபயோக சாதனங்கள் உற்பத்தி செய்பவர்கள், கூடுதல்
உற்பத்தியும், புதிய வியாபார ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவர். தாராள
லாபம் கிடைக்கும். மற்ற தொழில் செய்பவர்களுக்கு இவர்களை விட சற்று குறைவான
லாபம் கிடைக்கும். புதிய கிளை துவங்கும் முயற்சி நிறைவேறும். புதிய
பார்ட்னர்கள் சேர வாய்ப்புண்டு.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, தானியம், பலசரக்கு, இறைச்சி, கம்பளி, தோல், பிளாஸ்டிக்,
மருந்து, விவசாய இடுபொருள், மலைத் தோட்டப்பயிர்கள், ரப்பர் பொருட்கள்,
சமையலறை பாத்திரங்கள், மண்பாண்டம், மலர் வகைகள், மசாலா, பேக்கரி வியாபாரம்
செய்பவர்கள் கூடுதல் விற்பனையும், சேமிக்கும் வகையில் பணவரவும்
கிடைக்கப்பெறுவர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வியாபார நடைமுறைகளில்
கவனமுடன் செயல்படவேண்டும். அதிர்ஷ்ட வசமாக இதே காலகட்டத்தில் வீடு, வாகனம்
வாங்குவதற்கான முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.
பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சுறுசுறுப்புடன்
செயல்பட்டு பணிஇலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்றவை
விரும்பிய வகையில் கிடைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும்
சலுகைகள் நிரம்ப கிடைக்கும். சேமிக்க வழி ஏற்படும். மே, ஜூன், ஜூலை
மாதங்களில் செயல்களில் கவனத்தடுமாற்றம் வரும். விழிப்புடன் செயல்படுவதால்
அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மாணவர்கள்:
மருத்துவம், கேட்டரிங், மரைன், ஏரோநாட்டிக்கல், விவசாயம், தகவல் தொழில்
நுட்பம், சட்டம், இன்ஜனியரிங் பயிற்சி பெறும் மாணவர்கள், ஒருமித்த
தன்மையுடன் படித்து கூடுதல் தர தேர்ச்சியும், புகழும் பெறுவர். மற்ற
துறையிலுள்ள மாணவர்களும் சிறந்த மார்க் பெற்று உயர்வடைவர். மே, ஜூன், ஜூலை
மாதங்களில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பெற்றோர், ஆசிரியரின்
வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி வாழ்வில் சிறந்த இடத்தை பெறுவீர்கள்.
பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தெளிந்த மனதுடன் பணியில்
உற்சாகமாக செயல்படுவர். பணி இலக்கு எளிதில் நிறைவேறும். அக்டோபரில்
நடக்கும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு பதவி உயர்வு, பணியிடமாற்றம்
போன்றவை கிடைக்கும். குடும்பப்பெண்கள் கணவரின் அன்பையும், பாசத்தையும்
பெறுவர். ஆதிக்க மனப்பான்மை மேலோங்கும். வீட்டுச் செலவுக்கு தாராளமாக பணம்
கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தைவாய்ப்பு கிடைத்து
அதிக லாபம் பெறுவர்.
அரசியல்வாதிகள்: சொந்தப்
பணத்தை செலவு செய்தும், ஆதரவாளர்களிடம் மதிப்பை பெறுவதில் தாமதம்
ஏற்படும். மனம் தளராமல் இருந்தால், ராகு, சனி பெயர்ச்சிக்கு பின் உரிய
கவுரவமும், பொறுப்பு நிறைந்த பதவியும் கிடைக்கும். எதிரியால் இருந்த
தொல்லை குறையும். ஆதரவாளர்கள் எண்ணிக்கை உயரும். வழக்கு விவகாரங்களில்
அனுகூலத் தீர்வு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள்,
வளர்ச்சியும், தாராள லாபமும் கிடைக்கப் பெறுவர். உறவினர்களும் உரிய
மரியாதையுடன் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் உங்களை கவுரவிப்பர்.
விவசாயிகள்:
பயிர் வளர்க்க தேவையான அனைத்து அம்சங்களும் நிறைவாக கிடைக்கப்பெறுவர்.
மகசூல் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பினால் கிடைக்கும்
பலன் மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிகரிக்கும். நில விவகாரங்களில் ராகு,
கேது பெயர்ச்சிக்கு பின்னால் சாதகநிலை ஏற்படும். குடும்பத்தில்
சுபநிகழ்ச்சியை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள்.
பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.
செல்ல வேண்டிய தலம்: சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
பரிகாரப் பாடல்:
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் உனைநான் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம்மேவிய பெம்மான் இவனன்றே!