அரைக் கம்பத்தில் தொப்புள் கொடி தொகுப்பு: அறிவுமதி

ஈழத்தில் அழித்தொழிக்கப்படும் நம் தமிழ் இனத்தின் இழப்பைத் தாங்க முடியாமல் குமுறும் இதயங்களின் துடிதுடிப்பு இந்தக் கவிதைகள். மனசைப் பிசைந்து, இதயத்தின் ஆழம் வரை வேரோடி, உயிர் உருவும் கவிதைகள். மனதை ஆற்றுப்படுத்த முடியாமல் படிக்கும்போது தவிக்கப்போவது நிச்சயம்.
பரிவும், கோபமும், ஆற்றாமையும் கொண்டு கவிஞர்கள் கண்ணிர்க் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத புத்தகம். படிக்க நேர்ந்தால், தமிழ் இன உணர்வை ஆறுதலோடு பகிர்ந்து கொள்ளலாம்.

மார்கழிமாத கோலத்தின்
புள்ளிகளாகிப் போயின
தவறிவிழுந்த தோட்டாக்கள்
-ரா. நாகப்பன்
முள் குத்தியது
வலிக்கவில்லை
கட்டைக்கால்
-கவிமதி

ரத்தம் வடிந்த இடத்தில்
மொய்க்கும்
ஈக்களுக்குக் கூட
திகட்டி இருக்கும்
அராஜகமே
உனக்கேன்
அடங்கவில்லை ரத்தவெறி
-தேனுசா ஈசுவரன்
அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி

விடியற்காலைகள் விடிகின்றன
உங்களிடத்தில் பனித்துளியுடனும்
எங்களிடத்தில் கண்ணிர்த் துளியுடனும்
-ஆ.முத்துராமலிங்கம்
மிச்சமிருப்பது

வரும் சந்ததிக்கென்று
எதை மிச்சம் வைத்துவிட்டுப்
போவதென்று
உலகத்துச் சனங்களெல்லாம்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில்
சந்ததியே மிஞ்சுமாவென்ற
கவலை என் சனத்துக்கு மட்டும்.
-ம. மதிவண்ணன்
அந்தச் சிறுமி

உன்
வீட்டில்
பூச்செடிகள் இருக்கின்றனவா
உன்
வீட்டில்
பூனைகள் இருக்கின்றனவா
உன்
வீட்டில்
புறாக்கள் இருக்கின்றனவா என்று
பார்ப்பதும்
கேட்பதுமாய்
நுழைந்த சிறுமி
உன்
வீட்டில்
அப்பா
அம்மா
இருக்கின்றார்களா என்றுபோது
வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது
கண்ணிர்.
-ம.மோகன்
யுத்தவாடை

பதுங்கு குழிக்குள்
துள்ளி விழுந்து
காலொடிந்து கதறும்
கன்றுக் குட்டிகள்
விமானத்தைப் பார்த்துப்
பயத்தில்
கதறும்
பறவைகள்
குண்டுச் சத்தத்தில்
தொண்டை
அடைத்துப்போன
குயில்கள்
இறந்த வீடுகளுக்குள்
குஞ்சுகளைத் தேடி
அலையும்
குருவிகள்
இரத்தம் வழியும்
பூக்களில்
யுத்த வாடையை உணரும்
வண்ணத்துப் பூச்சிகள்
இவைகளையேனும்
காப்பாற்றுங்கள்
இவற்றில்
யாரும்
தமிழர்கள்
இல்லை
-நெல்லை ஜெயந்தா