உன்னைச் சந்தித்த
நாளிருக்கின்றதே !
நண்பா...
வாழ்க்கைப் புத்தகத்தின்
சகாப்தத்தின் சங்கீதம்....
நேற்றுப்போல்
நெஞ்சிலே
நீறுபூத்த நெருப்பாகத்
தகித்துக் கொண்டிருக்கும்
நட்புக் கொடுத்த
நயமான வலி.....
கன்னியொன்றைக்
கண்டதாலே
காதல் மனம் கொண்டதாலே
காரியம் வேண்டிக்
கண்டெடுத்த நண்பன் நீ.....
பார்த்தவுடனே
பரிவான உன்
பார்வையைக் கண்டதாலே
படர்ந்ததம்மா நட்பெனும்
பாசக்கொடி இதயத்தின் மீது
எத்தனை நாட்கள்
எப்படியான அனுபவங்களை
உந்தன் வீட்டுக்
கிணற்றோரத்திலும்
எந்த வீட்டு
இரும்புக் கதவருகிலும்
பகிர்ந்து கொண்டோம்..
பழையவைகள்
புதிதாகத் தெரிகின்றதா நண்பா...
கன்னியொருத்தியின்
இதயத்தில் வடகைக்கு
குடியமர
தூது போக உன்னைத்
துணை கேட்டு வந்த முதல்
எந்தன் குடும்பத்தில்
எனக்குத் தம்பியாய்
இணைந்த வரை....
நண்பா
நாம்
நடந்து வந்த பாதை
நட்பின் வரைவிலக்கணம்
நல்லன்பின் ஆரம்பம்
ஆடாத தெருக்கலில்லை
அளக்காத கதைகளில்லை
அனைத்தும் பொதுவென்ற மனப்பான்மை
அப்போதே நம்மனதில்
அமர்ந்து விட்ட பொழுதேயது
சிலநேரம் நெஞ்சத்தில்
சிறையாகும் சோகங்கள்
ஆறுதல் வார்த்தைகள்
அன்பாக உதிர்த்திடுவாய்
ஆனந்தம் மனதிலே
அடுத்தகணம் நிறைந்திடும்
எதையும் தாங்கும் இதயம்
எங்களுக்கு வந்ததுவும்
எண்ணங்கள் விரிந்து
கருத்துக் கடலாய்ப் பரந்ததுவும்
நண்பனே !
இணைந்து விட்ட எம்
நெஞ்சங்களில் திரண்டு நின்ற
நட்பெனும் உணர்வாலே ...
காலங்கள் ஓடியது
காதலும் வழமையான
கானலாகப் போனது
கண்ணால் கதைபேசி
காற்றாகப் பறந்துவிடும்
கன்னியரைக் கண்டதினால்
காயமான நெஞ்சங்களுக்கு
கடைசிவரை மருந்தாக இருந்தது
கற்கண்டான நட்பொன்றே ....
நாம் போன பாதைகள்
நடுவழியில் சிலகாலம்
திசைமாறிப்போனாலும்
அடுத்தொரு சந்திப்பில்
ஆண்டவனால் இணைந்து விட்டோம்....
உனக்கென்றோர் வாழ்க்கை
எனக்கென்றோர் வாழ்க்கை
ஆனாலும் நண்பனே
நமக்காக ஒரு வாழ்க்கை
நெஞ்சத்தில் என்றுமே
காயாத சுனையாக
காட்சியளிக்கின்றது
வாழ்க்கையில் மூன்று பருவங்கள்
வசந்தங்களும் மூன்றே
வாலிப வசந்தத்தில்
வாசமிக்க முல்லையாய்
வந்த நல்ல நண்பன் நீ...
வாழ்க்கையென்னும் வண்டியை
நடுப்பயணம்வரை ஓட்டி
நடந்து வந்த களைப்புத் தீர
ஓய்ந்திருந்து பார்க்கும் போது
வெய்யிலுக்கு நிழலாக
மீண்டும் நீ வசந்தமாய்.......
நண்பா .....
நமது
நட்பின் பெருமை
நமக்குள்ளே விதைத்த
ஆலவிருட்சம்
அந்த விழுதுகளின் துணை
அந்தம் வரை எம்மை
அழகாகக் காத்திருக்கும்