கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2025-07-12
8:05 AM

Welcome Guest | RSS Main | மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!

மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை (சாட்) அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...

சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.

அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதல்லவா அதற்காக....

இதோ

யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.

டேட்டிங் மற்றும் சாட்டிங்கிலும் மிகுந்த பாதுகாப்பான இணையதளங்கள் உள்ளன. ஏனோதானோவென்று ஏதாவது ஒரு இணையதளத்தில் அல்லாமல் பாதுகாப்பான இணையதளத்தில் அரட்டை அடிப்பது நல்லது.

மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.

இன்னுமொரு விஷயம் என்னவென்றால்.... இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இந்த அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. இதற்காக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது மின்னஞ்சல் அரட்டையில் ஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (உடனே திருமணம் ஆனவர்கள் அரட்டை அடிக்கக் கூடாதா என்று கேட்காதீர்கள்.)

பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது.

நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள். ஏனெனில் அவர் அளிப்பதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை அறிய இயலாது.

நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.

பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.

ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.

புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே.

கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.

பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம்.

அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.
Login form

Search

Calendar
«  ஆடி 2025  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz