கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2025-07-12
8:40 AM

Welcome Guest | RSS Main | கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

மூலிகை கட்டுரை : கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி

உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது ரத்த அணுக்களால் தூக்கியெறியப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் ரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

மேலும் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகின்றன.

சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும், இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன் அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்துவதால் கட்டிகளை உடனே உடைத்து அவற்றை ஆற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.

இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும், இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமன்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து ரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை. முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.

பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

பருவ காலத்தில் ஹார்மோன்களின் மாறுபாட்டினால் பருக்கள் உண்டாகின்றன. இவற்றை மோப்பரு எனவும் கூறுவார்கள். பழங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் உண்பதுடன், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 8 அல்லது 10 முறை முகம் கழுவ வேண்டும். சித்த மருத்துக் கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி பருவுள்ள இடங்களில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி வர தழும்புகளின்றி பரு மறையும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

Login form

Search

Calendar
«  ஆடி 2025  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz